நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயி தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
இத்திருப்பவையின் உரை!
நோன்பு நோற்று சுகாநுபவம் உடைய அம்மே! வாசற்கதவைத் திறவாதவர்கள் ஒரு வாய் சொல்லும் கொடுக்க மாட்டாரோ? நறு நாற்றம் வீசாநின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்துள்ள திருமுடியை உடைய நாராயணனும், நம்மால் மங்களாசாசனம் பண்ணப் பெற்றுப் புருஷார்த்தங்களை தந்தருள்பவனும் தர்மமே வடிவு கொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால் முன் ஒரு காலத்திலே விழுந்தொழிந்த கும்பகர்ணனும் தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்கே தான் கொடுத்தானோ? மிகவும் உறக்கம் உடையவளே! பெருதர்க்கரிய ஆபரணம் போன்றவளே!தெளிந்து வந்து கதவைத் திறந்திடு;
என ஆண்டாள் தன் தோழியை எழுப்புகின்றாள்.
No comments:
Post a Comment